கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இது வரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 771 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 682 பேர் முதல் தவணையும், 75 ஆயிரத்து 89 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.ஆனால் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி வரத்து குறைவாக இருந்தது. அதிலும் குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி இல்லாமல் இருந்தது. இதனால் முதல் தவணை தடுப்பூசி போட்ட பொதுமக்கள், 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினந்தோறும் சென்று வந்தனர்.
அவர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் தடுப்பூசி வந்ததும், தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அதேவேளை கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்நிலையில் நேற்று கடலூர் அரசு மருத்துவமனைக்கு 470 கோவாக்சின் தடுப்பூசியும், 770 கோவிஷீல்டும் வழங்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் காலை முதலே ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்களுக்கு மட்டும் மருத்துவமனை ஊழியர்கள், டோக்கன் வினியோகம் செய்தனர்.
டோக்கன் பெற்றவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 2-வது தவணை தடுப்பூசி போட்டனர். இதேபோல் 770 கோவிஷீல்டு வந்ததில், 140 தடுப்பூசி போடப்பட்டது. மீதி 630 கோவிஷீல்டு இருப்பு உள்ளது. இது மட்டுமின்றி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்