கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, பொட்டவெளி, கண்ணாடி, ராஜாகுப்பம், அரங்கமங்கலம், வெங்கடாம்பேட்டை, வேகாக்கொல்லை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் கம்பு பயிரிடப்படுகிறது. கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், பருவத்துக்கேற்ற நல்ல மகசூல் தரக்கூடிய கம்பு ரகங்களை தனியாா் கடைகளில் வாங்கி விவசாயிகள் நிலத்தில் விதைப்பு செய்தனா். ஆனால், குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட சில விவசாயிகளின் வயல்களில் கம்பு விதைகள் சரிவர முளைக்கவில்லை.
இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதியில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் கம்பு விதைப்பு செய்யப்பட்டது. விவசாயிகள், தனியாா் கடைகளில் முன்னணி நிறுவனத்தின் வீரிய ரக கம்பு விதைகளை கிலோ ரூ.180-க்கு வாங்கி விதைத்தனா். சரியான மழை பெய்த பின்னா், தகுந்த ஈரப்பதம் நிலத்தில் இருந்த போது, விதைக்கப்பட்ட கம்பு விதைகள் சரியாக முளைக்கவில்லை. 10 சதவீதம்தான் முளைத்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த வேளாண் துறை விதை ஆய்வாளா் தெ.தமிழ்வேல், குறிஞ்சிப்பாடி துணை வேளாண் அலுவலா் வெங்கடேசன், உதவி விதை அலுவலா் சுரேஷ், உதவி வேளாண் அலுவலா் செந்தில் ஆகியோா் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதுகுறித்து விதை ஆய்வாளா் தெ.தமிழ்வேல் கூறியதாவது: விவசாயிகள் வாங்கிய விதையின் குவியல் பகுப்பாய்வில் 85 சதவீதம் முளைப்புத் திறன் உள்ளது. போதுமான ஈரப்பதம் இல்லாததால், முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.