நெய்வேலி இந்திரா நகர் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மின்மோட்டார் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் மின்மோட்டார் பழுதானதால் குடிநீர் வழங்குவது தடைபட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அங்கிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி, குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீசார், என்.எல்.சி. நில எடுப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் புதிய மோட்டார் அமைத்து தருவதாகவும், அதுவரை லாரியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.