மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில், வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களின் உரிமைக்காக அர்ப்பணித்த மனித உரிமைப் போராளி மறைந்த அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு வீரவணக்க அஞ்சலி நடைபெற்றது.
மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார் தலைமை வகித்தார். உதவி பங்குத்தந்தை கஸ்மீர்ராஜ் அடிகளார், அல்ஹாஜ் முகம்மது சித்திக், தூய இதய மரியன்னை சபையின் மயிலாடுதுறை இல்ல தலைமை அருட்சகோதரி சிப்ரியான், திமுக நகர செயலாளர் செல்வராஜ், அமல அன்னையின் சலேசிய மறைபரப்பு சபையின் மயிலை இல்லத் தலைமை அருட்சகோதரி கிரேசி, திரு இருதய சகோதரர்கள் இல்லத்தலைவர் அருட்சகோதரர் டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்த ஸ்டேன் சுவாமியின் போராட்ட பயணங்களையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும் எடுத்துக்கூறி புகழஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைகளில் மெழுகுதிரி ஏந்தி, வீரவணக்க முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.
பேரணியின் முடிவில் மனித உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமியின் படத்திற்கு அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சட்டமன்ற உறுப்பினர், இறைமக்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.