கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழவீதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 75). இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அங்கிருந்த சாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்கள் சிலர் காளிமுத்துவிடம் 10 மணிக்கு மேல் ஏன் கோவிலுக்கு வருகிறீர்கள் என கேட்டனர். இதனால் காளிமுத்துவுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் காளிமுத்து அங்கிருந்து புறப்பட்டு கீழ சன்னதி வழியாக சென்று அங்குள்ள கடையில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த சாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்கள் ஓமக்குளம் பகுதியை சேர்ந்த ராம்குமார் (30), மீதிகுடியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22), செங்காட்டான் தெருவை சேர்ந்த வெற்றி வேலன் (21), செல்வம் ஆகியோர் காளிமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் காளிமுத்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமார், சூரியபிரகாஷ், வெற்றிவேலன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.