காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவநேசன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு நான்கு மயில் குஞ்சுகளை எடுத்து வந்து தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதனிடம் ஒப்படைத்தார்.
மயில்கள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து சிவநேசனிடம் விசாரித்தனர். அப்போது தெரியவந்ததாவது:-
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவேநசனின் வயலில் 4 முட்டைகள் கிடந்துள்ளது. அதை எடுத்து வந்த அவர், தான் வளர்த்து வரும் கோழி இட்ட முட்டைகளுடன் வைத்தார். முட்டையை அடைகாத்து வந்த கோழி, அதில் குஞ்சுகளையும் பொறித்தது. அவர் வளர்த்த கோழி குஞ்சுகளுடன் அவைகளும் வளர்ந்து வந்தது. 2 மாதங்களாக வளர்ந்த அந்த குஞ்சுகள் தற்போது கொஞ்சம் பெரியதானது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சிவேநசனிடம் இது கோழி குஞ்சுகள் அ ல்ல மயில்கள் என்று தெரிவித்தனர். இதை வீட்டில் வளர்க்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பயந்து போன சிவநேசன் அந்த நான்கு மயில்களையும் எடுத்து வந்து காட்டுமன்னார் கோவில் தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தது தெரியவந்தது. இதையடுத்து நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் காட்டுமன்னார்கோவில் வனத்துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று அந்த நான்கு மயில்களையும் வனப்பகுதியில் விட்டார்.
கடந்த 2 மாதங்களாக கோழி குஞ்சுகள் என்று நினைத்து மயில் குஞ்சுகளிடம் சிவேநசன் அன்புபாராட்டி வந்தார். அவரது தோள் மீது ஏறி மயில் குஞ்சுகள் கொஞ்சி விளையாடிவந்தன.
இத்தனை நாட்கள் தன்னுடன் பழகி வந்த மயில்கள், இனி திக்கு தெரியாத காட்டுக்குள் சென்று என்ன செய்யப் போகிறதோ என்று எண்ணியபடி மயில் குஞ்சுகளிடம் இருந்து பிரிய மனமின்றி சிவேநசன் ஒருவித சோகத்துடன் அங்கிருந்து சென்றார். அதே மனநிலையில் தான் அந்த மயில்குஞ்சுளும் தங்களது புதிய உலகமான வனப்பகுதிக்குள் அடியெடுத்து வைத்தன. இது அங்கிருந்தவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.