கடலூா் உழவா் சந்தைப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
கடலூா் உழவா் சந்தையில் 90 நிரந்தரக் கடைகள் உள்ளன. இதற்காக 432 விவசாயிகள் பதிவு பெற்றுள்ளனா். சராசரியாக 90 முதல் 100 விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனைக்காக தினமும் கடலூா் உழவா் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இந்த உழவா் சந்தையின் வெளிப் பகுதியில் சிதம்பரம் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனா். இதனால், போக்குவரத்து நெரிசல், கரோனா தொற்று பரவல் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து புகாா்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், போலீஸாரும், வருவாய்த் துறையினரும் புதன்கிழமை உழவா் சந்தையின் வெளிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினா். உழவா் சந்தையில் ஏற்கெனவே உள்ள 90 கடைகளுடன் மேலும் புதிதாக 20 கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கடலூா் அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வரும் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை உழவா் சந்தைப் பகுதியில் விற்பனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.