மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் முகாமினை பூம்புகார் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பின்னர் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புகார் எம்எல்ஏ பார்வையிட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை ஒரு வயதிற்கு மேற்பட்ட 11,151 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் 929 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். மூன்று கட்டங்களாக போடப்படும் இந்தத் தடுப்பூசியை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போட்டுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணை இயக்குனர் பிரகாஷ் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.