கோவா: வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கோவா..!. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு!!
கோவா மாநிலத்தில் திடீரென எதிர்பார்க்காத அளவுக்கு பெய்த மழையின் காரணமாக அங்கு பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கனடாவில் வரலாறு காணாத வெப்பநிலை நிலவுகிறது என்றால், ஜெர்மனியில் திடீரென பெருமழை பெய்து சாலைகளில் நிற்கும் வாகனங்கள் கூட வெள்ளம் அடித்து செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. இதேபோலத்தான் வரலாறு காணாத அளவுக்கு சீனாவில் பெரும் மழை மற்றும் வெள்ளம் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவா மாநிலத்தில் நேற்று இப்படித்தான் திடீரென யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகக் கடுமையான மழை பெய்தது. மழையின் அடர்த்தி எதிரே நிற்பவர்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு கடுமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலைகள் , பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக இப்படி ஒரு மிகப் பெரிய வெள்ளம் வந்ததே கிடையாது என்று கூறுகிறார்கள் கோவா மக்கள். வெள்ள நீர் சூழ்ந்ததால் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த வியாழக்கிழமை கோவா மாநிலத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பித்திருந்தது. வெள்ளிக்கிழமை ஆரஞ்சு என்ற வகையில் அதன் வீரியத்தை குறைத்து இருந்தது . ஆனால் எதிர்பார்க்காத அளவிற்கு வெள்ளிக்கிழமையில் மிகப்பெரிய மழை கொட்டி தீர்த்தது. இதன்பிறகு சிவப்பு அலர்ட் கொடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பை மாற்றிக் கொண்டது. வானிலை ஆய்வு மையம் முன்கூட்டி கணிக்க முடியாத அளவுக்கு மிக மோசமான அளவுக்கு மழை பெய்துள்ளது என்பது தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கோவா மாநிலத்தின் மிகப்பெரிய நதியான மாண்டோவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மக்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படை மற்றும் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது. இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ( 01134 Mangaluru Jn – CST Terminus Express) கோவா மாநிலத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது . ரயில் மீது பாறைகள் உருண்டு வந்து விழுந்ததால் இன்ஜின் பகுதி மற்றும் முதலாவது பெட்டி தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு கீழே இறங்கியது. இருப்பினும் பெரிய அசம்பாவிதம் நடைபெறாமல் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.