சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதையொட்டி தமிழக முதல்வர் கவனத்திற்கு மனுவை எடுத்து சென்று மறுபரிசீலனை செய்ய 100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், ‘அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து தமிழக முழுவதும் பணிநிரவலுக்கு சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மிகக்குறைவாக ஊதியம் பெறும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் ஊழியர்கள் பணிநிரவலில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களின் வாழ்வில் விடியல் வேண்டி தமிழக முதல்வர் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் மனுக்களை அளித்தனர்.
மனுக்கள் குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லாமல் 800க்கும் மேற்பட்ட மனுக்களை அரசின் கொள்கை முடிவு என நிராகரித்துவிட்டனர். எனவே முதல்வரிடம் கொடுக்கப்பட்ட மனுவை தமிழக முதல்வர் பார்வைக்கு எடுத்துச்சென்று மறுபரிசீலனை செய்து பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’ என கூறியுள்ளனர்.