கடலூர் மாவட்டத்தில் சுருக்கு மடி வலைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மீனவர்கள் இந்த வலையை பயன்படுத்தி வந்தனர். இதை அறிந்து மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததால், மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தாமல், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு போராடி வருகின்றனர்.இது தவிர சில கிராம மீனவர்கள் இழு வலையில் கண்ணிகளின் அளவை அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாக வைத்திருப்பதாக புகார் எழுந்தது. மேலும் அதிக திறன் என்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடித்ததாக புகார் எழுந்தது. இதை மீன்வளத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால் மீனவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கிராமம், கிராமமாக சென்று மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து மீனவர்களும் கலந்து கொள்ளும் வகையில் அமைதி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்திற்கு சென்று, அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-நடுநிலையோடு இருக்க வேண்டும்நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறீர்கள். கடந்த ஆண்டுகளில் நீங்கள் ஒரு கருத்தை சொன்னால் அது பிரச்சினையாக தெரியாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. கவன ஈர்ப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டீர்கள். எதை செய்தாலும் சட்டத்துக்கு உட்பட்டு தான் செய்ய வேண்டும்.எங்கள் வரையறைக்கு உட்பட்டு நாங்கள் செய்ய வேண்டியதை செய்து தான் வருகிறோம். உங்கள் கோரிக்கைகளை சட்டத்துக்கு உட்பட்டு தான் செய்ய முடியும். மீன் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் வெளிப்படையாகவும், நடுநிலையோடும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன். மற்ற கிராமத்தினரிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்த்து உங்கள் தவறை முதலில் உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும்.
தொழில் ரீதியான பிரச்சினைகளை மீனவர்கள் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு கிராம அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதற்காக தான் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்தி வருகிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அமைதி அவசியம் தேவை.இதற்காக, மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைதிக்குழு ஏற்படுத்த இருக்கிறோம். அதில் அனைத்து மீனவ கிராமத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதுபற்றி மற்ற மீனவ கிராமத்தினரையும் சந்தித்து பேச இருக்கிறேன். இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறினார். துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் முன்னிலை வகித்தார். இதில் தேவனாம்பட்டினம் கிராம தலைவர் பெரு.ஏகாம்பரம், கோவிந்தசாமி, அருள், கன்னியப்பன், செல்வம், ராஜசேகர் உள்பட மீனவர் சங்க நிர்வாகிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.