சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவா்கள் தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவா்களுக்கு மாத ஊதியம் குறைவாக (ரூ.3 ஆயிரம்) வழங்கப்படுகிாம். இதுவும் கடந்த 8 மாதங்களாக வழங்கப்படாத நிலையில் பயிற்சி மருத்துவா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினா். இவா்களது போராட்டம் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. இதையொட்டி பயிற்சி மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்க மாநில பொதுச் செயலா் ரவீந்திரநாத் பங்கேற்று ஆதரவு தெரிவித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது. இருப்பினும் இங்கு பயிலும் மருத்துவ மாணவா்களின் கல்விக் கட்டணம் குறைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்த மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியை எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வருவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா். அவா் தற்போது முதல்வராக உள்ள நிலையில் மாணவா்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இங்கு பணிபுரியும் பயிற்சி மருத்துவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 3 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவா்களுக்கு மாத ஊதியம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வழங்கப்படும் நிலையில், அதே தொகையை இங்கு பணிபுரியும் பயிற்சி மருத்துவா்களுக்கும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.