கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்ட 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு உள்பட சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, சிறப்பு இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வன்னியர் சமூகத்திற்கான 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றி” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“வன்னியர் சமூகத்திற்கான 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றி” – பாமக நிறுவனர் ராமதாஸ்.