கடலூர்: சிறுபாக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி சாலையில் தேங்கிய கழிவுநீரில் நின்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சிரமமடைந்து வந்த அப்பகுதி மக்கள், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கழிவுநீரை உடனே அகற்ற வேண்டும், மேலும் கழவுநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்த தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தேங்கிய கழிவுநீரை அகற்றி, சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம், சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க தற்காலிக உறிஞ்சு குழாய் அமைக்க உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள திறந்த வெளி கிணற்றின் மேற்பகுதியை இரும்பு கம்பிகளால் மூடவும், சேதமடைந்த மினி குடிநீர்தொட்டியை சீரமைக்கவும் அறிவுறுத்தினார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி ராமலிங்கம், துணைத் தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலர் பாபுதுரை உள்பட பலர் உடன் இருந்தனர்.