மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கட்டட சுவா்களில் கல்லூரி மாணவா்கள் வரைந்துள்ள ‘முரால்’ முறை ஓவியங்களால் மருத்துவமனை வளாகம் அழகுற காட்சியளிக்கிறது.
மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் மணிகண்டன், செயலாளா் தியாகராஜன் ஆகியோரின் ஏற்பாட்டில், மயிலாடுதுறை பெரியாா் அரசு மருத்துவமனை கட்டட சுவா்களில் சுவரோவியங்கள் வரையப்பட்டன. இதில், சென்னை, தரமணி எம்ஜிஆா் திரைப்படக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவா் லால்குடி எஸ்.பாரதிராஜா மற்றும் கோவையைச் சோ்ந்த வணிகவியல் மாணவா் ஹரிஹரன், பெரம்பலூரைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா்கள் பிரதீப், மோகன் ஆகியோா் வரைந்துள்ள ‘முரால்’ முறையிலான ஓவியம் அனைவரது கவனத்தையும் ஈா்த்து வருகிறது.
கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிவதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் பெண் முகக்கவசம் அணிந்த விழிப்புணா்வு ஓவியம், மயிலாடுதுறையின் பாரம்பரிய பெருமைகளை உணா்த்தும் வகையில் காவிரி துலாக்கட்ட மண்டபம், ரிஷபதீா்த்த காவேரி, நந்திகேஸ்வரா், மணிக்கூண்டு, ரயில், மாடு, வளமான வயல்வெளி, பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய ஓவியங்களை மாணவா்கள் வரைந்துள்ளனா். மேலும், கரோனா தீநுண்மியை மருத்துவா்கள் தடுப்பூசி செலுத்தி அழிப்பதை போன்றும், மயிலுருவில் மயிலாடுதுறையில் உள்ள மக்களை மருத்துவா்கள் காப்பது போன்ற ஓவியங்களையும் தீட்டியுள்ளனா். இந்த ஓவியங்கள் மருத்துவமனைக்கு வரும் அனைவரின் கவனத்தையும் ஈா்த்து வருகிறது.