மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகளிர் சுய உதவிகுழு கடனை திருப்பி செலுத்த பெண்ணின் கணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூரை சேர்ந்தவர் ஜான். கூலி தொழிலாளி. இவர் கொள்ளிடம் அடுத்த எருக்கூரை சேர்ந்த ஜோஸ்பின் மேரியை, திருமணம் செய்து கொண்டு, மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில், ஜோஸ்பின் மேரி, அதே பகுதியை சேர்ந்த பிலோமினா மேரி என்பவர் தலைமையிலான மகளிர் சுய உதவிக் குழுவில் சேர்ந்து கடன் பெற்றுள்ளார். ஆனால், கடன் தொகையை முழுமையாக திருப்பி செலுத்த வில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, பிலோமினா மேரிக்கு ஆதரவாக அவரது கணவர் ஆரோக்கியதாஸ் என்பவர், ஜோஸ்பின் மேரியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அதனை பார்த்த ஜான், அவரை தட்டிக்கே ட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், ஆரோக்கியதாஸ் தாக்கியதில் ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார், விரைந்து சென்று ஜான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ஜோஸ்பின் மேரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி ஆரோக்கியதாஸை தேடி வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழு கடன் விவகாரத்தில் தொழிலாளி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.