தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். துணைத் தேர்வில் பெறும் மதிப்பெண்களே 12ஆம் வகுப்பு தேர்வின் இறுதியான மதிப்பெண்கள் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “12ஆம் வகுப்பு மறுதேர்வு எழுத இதுவரை 23 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 100% கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளைத் தண்டிப்பதைக் காட்டிலும், கண்டிக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.