ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி மற்றும் உலக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி அணிகளுக்கு இடையே காலிறுதிப் போட்டி நடைபெற்றது. நான்கு செட்களாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டில் இரண்டு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடி எந்த கோலும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இரண்டாவது செட்டில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த தொடங்கிய ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி வீராங்கனைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, ஒரு கோல் அடித்தனர். இந்த கோலை இந்திய வீராங்கனை குர்ஜித் கௌர் அடித்து இந்திய அணி வரலாற்று வெற்றிபெற உதவி புரிந்தார். பின்னர் அடுத்து நடந்த 3வது மற்றும் 4வது செட்களில் ஆஸ்திரேலிய அணியை எந்த கோலும் அடிக்க விடாமல் இந்திய வீராங்கனைகள் சிறப்பான தடுப்பாட்டம் ஆடினர்.
இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி நேற்று மாலை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஒரு ஒலிம்பிக் தொடரில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் ஹாக்கி அணிகள் ஒருசேர அரையிறுதி போட்டிக்குள் நுழைவதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி நாளை பெல்ஜியம் அணியை எதிர்கொள்ள உள்ளது, மகளிர் ஹாக்கி நாளை மறுநாள் அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.