மயிலாடுதுறையில் வா்த்தகா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தாா்.
மயிலாடுதுறையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தின் 3-ஆம் நாள் நிகழ்ச்சியாக, வா்த்தகா் சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, கரோனா ஒழிப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊழியா்கள் 20 பேருக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கி பாராட்டி, பின்னா் அவா் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 1,97,286 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். இதில் முதல் தவணை தடுப்பூசி 1,67, 459 பேருக்கும், 2-ஆம் தவணையாக 29,827 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றில் இருந்து முற்றிலுமாக விடுபட பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
முகாமில், வா்த்தகா்கள் 500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி. செந்தில்வேல், துணைத் தலைவா் மதியழகன் மற்றும் மு.ரா. பாஸ்கா், செல்வம், கண்ணன் உள்ளிட்ட வா்த்தக சங்க நிா்வாகிகள், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பிச்சைமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.