0 0
Read Time:6 Minute, 18 Second

பெசன்ட் நகரில், 13 வயது சிறுமி ஒருவர் குளிர்பானம் அருந்தி மயக்கமடைந்து உயிரிழந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குளிர்பான ஆலைக்கு தற்காலிகமாகச் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (40). இவரது மனைவி பெயர் காயத்ரி (34). இந்த தம்பதிக்கு அஸ்வினி (16) மற்றும் தாரணி (13) என இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் தாரணி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு முன்பு சதீஷின் மனைவி காயத்ரி தனது இரு மகள்களை அழைத்துக் கொண்டு, சென்னை பெசன்ட் நகரை அடுத்த ஓடைக்குப்பம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை காயத்ரியின் இளைய மகள் தாரணி ஓடைக்குப்பம் பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றிற்குச் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட 10 ரூபாய் குளிர்பானம் மற்றும் ரஸ்னா பாக்கெட் ஆகியவற்றை வாங்கி அருந்தியிருக்கிறார். குளிர்பானம் மற்றும் ரஸ்னா இரண்டினையும் சிறுமி தாரணி ஒன்றன், பின் ஒன்றாக குடித்ததாகக் கூறப்படுகிறது. குளிர்பானம் அருந்திய சில நிமிடங்களில் சிறுமி தாரணி வாந்தி எடுத்ததாகவும், பின்னர் மூக்கிலிருந்து ரத்தம் வந்து மயக்கமடைந்து கீழே சரிந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமி மயக்கமடைந்ததைக் கண்டு அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர், உடனடியாக சிறுமி தாரணியைத் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமியின் உடல் முழுவதும் நீல நிறமாக மாறியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்த சாஸ்திரி நகர் போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளிர்பானம் அருந்திய சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிறுமி தாரணி குடித்த `Togito Cola’ என்ற குளிர்பானத்திலிருந்து மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குளிர்பானம் விற்பனை செய்யப்பட்ட மளிகைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் சிறுமி குடித்த குளிர்பான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். அப்போது அதே குளிர்பானம் சுமார் 17 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக, சாஸ்திரி நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள `அக்க்ஷயா ஃபுட் ப்ராடக்ட்ஸ்’ என்ற அந்த குளிர்பான உற்பத்தி ஆலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், பொன்னேரி ஆர்.டி.ஓ மற்றும் அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஜெகதீஷ் ஆலையில் குளிர்பானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் குறித்த விவரங்களை அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், குளிர்பான ஆலையிலிருந்து சோதனைக்காக மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து, உடல் ஒவ்வாமை காரணமாகச் சிறுமி உயிரிழந்தாரா? அல்லது குளிர்பானத்தில் நச்சுத்தன்மை இருந்ததன் காரணத்தால் உயிரிழந்தாரா? என்பது ஆய்வில் தெரியவரும் வரும். அதுவரை குளிர்பான ஆலையைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். ஜெகதீஷின் உத்தரவின் பேரில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆலைக்குச் சீல் வைத்தனர்.

குளிர்பானம் அருந்திய சிறுமி சில நிமிடங்களில் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %