இருதய கோளாறு காரணமாக, இதயமற்ற பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்மார்கள் தானமாக வழங்கிய தாய்பாலை கொடுத்து, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த தம்பதிக்கு, ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி 3வதாக பெண் குழந்தை பிறந்தது. இரண்டு கிலோ எடையுடன் பிறந்த குழந்தைக்கு, இதயத்தில் கோளாறு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஜூலை 2 ம் தேதி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டது.
அக்குழந்தைக்கு ஆக்சிஜனுடன் கூடிய ரத்தமும், ஆக்சிஜன் இல்லாத ரத்தமும் ஒன்றாக கலந்து இதயத்திலிருந்து வெளியேறியதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் குழந்தையின் உடலில் ஆக்சிஜன் அளவு 70 முதல் 80 என்ற ஆபத்தான நிலையிலேயே தொடர்ந்து இருந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக ஒரு குழந்தை பிறந்து அதுவும் இருதயத்தில் கோளாறோடு உயிருக்குப் போராடிய நிலையில், குழந்தை இனி பிழைக்காது என்று எண்ணிய பெற்றோர், சிகிச்சையை நிறுத்தி குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யுமாறு மருத்துவர்களை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தங்களது முடிவில் பிடிவாதமாக இருந்த பெற்றோர் ஒரு கட்டத்தில் குழந்தை வேண்டாம் என எழுத்துப் பூர்வமாக தெரிவித்துவிட்டு, கிளம்பிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தாய்ப்பால் வங்கியின் மூலம் தற்போது அந்தக் குழந்தைக்கு குழாய் வழியாக, சீராக தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் பெண் குழந்தைக்கு, 12 வாரங்கள் முடியும் பட்சத்தில், இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிறந்த போது இரண்டு கிலோவாக இருந்த குழந்தையின் எடை, இருதய நோயினால், 1.6 கிலோவாக எடை குறைந்தது. அதன் எடையைக் கூட்டும் மருத்துவர்களின் பெரும் போராட்டத்தின் பலனாக குழந்தையின் எடை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. முழுமையான சிகிச்சைக்குப் பின் முறையாக அரசு இல்லத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தாயும் தந்தையும் உயிரோடு இருந்தும் அவர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அந்த பிஞ்சுக் குழந்தையை மருத்துவர்களும் செவிலியர்களுமே தாய், தந்தையாக மாறி கவனித்து வருகின்றனர்.
நன்றி:பாலிமர் நியுஸ்