கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர் பணிக்கான 2-ம் கட்ட உடற் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடந்தது. இதில் 1822 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தொடர்ந்து பெண் போலீசாருக்கு முதல் கட்ட உடற்தகுதி தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில் 603 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கு நேற்று 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதற்காக காலை 4 மணி முதலே மைதானத்தின் முன்பு வந்து தேர்வர்கள் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் 6 மணிக்கு மைதானத்திற்குள் அழைக்கப்பட்டனர். ஓட்டப்பந்தயம் தொடர்ந்து அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைவரும் தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.
இதில் தேர்வான நபர்கள் அனைவரும் தனியாக அழைக்கப்பட்டனர். தோல்வி அடைந்தவர்கள் வெளியேற்றப் பட்டனர். ஏற்கனவே அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டாலும், மீண்டும் அனைவரும் அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதனால் 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு வந்த அனைவரும் அசல் சான்றிதழ்களை நேற்றும் கொண்டு வந்தனர். அந்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் 550 பேருக்கு உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டனர்.
அதில் 7 பேர் வராத நிலையில், 543 பேர் பங்கேற்றனர். அதில், 479 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வை போலீஸ் டி.ஐ.ஜி.எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் ஆகும். தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 11-ந்தேதி வரை ஆண்களுக்கும், 12, 13-ந்தேதிகளில் பெண்களுக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வும் நடக்கிறது.