சிதம்பரம் நகராட்சி 33 வார்டுகளை கொண்டதாகும். நகரின் கழிவுநீர் வெளியேற்றத்துக்காக பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்த பாதாள சாக்கடை குழாய் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீர், லால்புரத்தில் இயங்கி வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கென வண்டி கேட், மணலூர் கிராமம் வழியாக லால்புரத்துக்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மதியம் சிதம்பரம் வண்டி கேட்-புவனகிரி செல்லும் மெயின் ரோட்டில், மணலூர் அருகே தார் சாலை திடீரென உள் வாங்கியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். மேலும் அந்த பகுதியில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
இதனால் அந்த பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசியது. இதன் பின்னர் தான், அந்த பகுதியில் லால்புரம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வகையில் பதிக்கப்பட்டு இருந்த பாதளை சாக்கடை திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியதுடன், கழிவு நீரும் வெளியேறியது தெரியவந்தது. உடன், அந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், மாற்று சாலையில் பஸ்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி. எம்.சேகர், லால்புரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு, சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறியதை தற்காலிகமாக நிறுத்தினர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பகுதியின் வழியாக பாதள சாக்கடை குழாய் அமைத்து ஒரு வருடம் ஆகிறது. அதோடு, இந்த தார் சாலையானது அமைத்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை. இதுபோன்ற சூழலில் தான் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலை உள்வாங்கி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தின் போது, அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.பாதாள சாக்கடை திட்ட பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்திட வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.