கடலூா் கேப்பா் மலையில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இங்கு, விசாரணை, தண்டனைக் கைதிகள் சுமாா் 700 போ்அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால் கைதிகளை உறுவினா்கள் நேரடியாக சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வழியாக மட்டுமே பேசிக்கொள்கின்றனா்.
இந்த நிலையில், கடலூா் மத்திய சிறையில் சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ்ராஜ் தலைமையில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் 92 போ், சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாருடன் இணைந்து வெள்ளிக்கிழமை காலையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தண்டனை, விசாரணைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைகள் உள்ளிட்ட பகுதிகளை சோதனையிட்டனா். சுமாா் 1.30 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.