அதிதி அசோக் பதக்கம் வெல்லவில்லைதான். ஆனால், இதுவரை மேல்தட்டு மக்களுக்கான விளையாட்டாக மட்டுமே அறியப்பட்டிருந்த கோல்ஃபை நான்கே மணி நேரத்தில் அனைத்து மக்களுக்குமானதாக ஜனநாயகப்படுத்தியிருக்கிறார்.
அதிகாலை 4 மணிக்கே அலாரம் வைத்து எழுந்து கோடிக்கணக்கான இந்தியர்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தனர். கிரிக்கெட் போட்டி எதுவும் நடக்கவில்லை. ராக்கெட் எதுவும் விண்ணில் ஏவப்படவில்லை. ஆனால், அவற்றை விட அதிக எதிர்பார்ப்போடும் ஆவலோடும் கோல்ஃப் போட்டியை கண்டுகொண்டிருந்தனர். காரணம், அதிதி அசோக். ஒரே வீராங்கனை… ஒரே நாளில் இந்தியா மொத்தத்திற்கும் ஒரு புதிய விளையாட்டை அறிமுகப்படுத்திவிட்டார்.
கிரிக்கெட்டை தாண்டி சாமானிய இந்தியர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களை அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், ஒலிம்பிக் போன்ற பெரிய தொடர்களின் போது மட்டும் ஊடகங்களின் வாயிலாக மற்ற விளையாட்டு வீரர்/வீராங்கனைகளின் பெயரை தெரிந்துகொண்டு பதக்கத்திற்காக ஏக்கத்துடன் காத்திருப்பர். அதிதியை அப்படி கூட யாரும் தெரிந்திருக்கவில்லை. காரணம், அவர் மீது துளி கூட எதிர்பார்ப்பு இருந்திருக்கவில்லை. மேலும், கோல்ஃப் எப்போதுமே இந்தியர்களுக்கு ஒரு அந்நியமான விளையாட்டுதான். அதிலெல்லாம் இந்தியர்கள் கலந்துகொண்டு வெல்வதில் சாத்தியமே இல்லை என்கிற எண்ணமும் வலுவாக இருந்தது.
அதிதி வேறு தரவரிசையில் 200-வது இடத்தில் இருந்த வீராங்கனை. பெயர்கூட வெளியில் தெரியாமல் கூட்டத்தோடு கரைந்து போய்விடுவார் என்றே நினைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையெல்லாம் அதிதி உடைத்தெறிருந்திருக்கிறார். வரலாறு படைத்திருக்கிறார்!
மொத்தம் நான்கு நாட்கள் போட்டி நடைபெற்றிருக்கிறது. முதல் நாளிலிருந்தே அதிதி அட்டகாசமாக பெர்ஃபார்ம் செய்து வந்தார். முதல் நாளில் 18 குழிகளில் பந்தை சேர்க்க வேண்டும். மொத்தம் 71 வாய்ப்புகள். அதிதி 67 வாய்ப்புகளிலேயே குழிகளில் பந்தை சேர்த்து 4 Under Par எடுத்திருந்தார். முதலிடத்திலிருந்த அமெரிக்க வீராங்கனையான நெல்லியுமே முதல் நாளில் 4 Under Par ஸ்கோரே எடுத்திருந்தார். மற்ற வீராங்கனைகள் சராசரியாக 69-70 Under Par களையே எடுத்திருந்தனர். முதல் நாள் முடிவிலேயே சக வீராங்கனைகளை ஆச்சர்யப்படுத்திவிட்டார் அதிதி.
இரண்டாம் நாளில்தான் அதிதியின் பெஸ்ட் வெளிப்பட்டிருந்தது. 18 குழிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 71 வாய்ப்புகளில் 66 வாய்ப்புகளிலேயே பந்தை சேர்த்து 5 Under Par எடுத்திருந்தார். இரண்டாம் நாளில் பல வீராங்கனைகளும் 6 Under Par ஸ்கோர்களை எடுத்திருந்தாலும் முதல் சுற்று ஸ்கோரையும் சேர்த்து அதிதி டாப் 3-க்குள்ளேயே நீடித்தார்.
மூன்றாம் நாளான நேற்று வழங்கப்பட்ட 71 வாய்ப்புகளில் 68 வாய்ப்புகளை பயன்படுத்தி 3 Under Par ஸ்கோரை எடுத்திருந்தார். அமெரிக்க வீராங்கனை நெல்லியும் 3 Under Par தான் எடுத்திருந்தார். நெல்லி இரண்டாம் நாளில் 9 Under Par எடுத்திருந்தார். அதிதி மூன்றாம் நாளில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடியிருந்தால் முதலிடம் பிடித்திருப்பார். ஆனால், நெல்லிக்கு பிறகு இரண்டாமிடத்தில் மொத்தமாக 12 Under Par எடுத்து நிலையாக இருந்தார். அதிதிக்கு பிறகு நான்கு வீராங்கனைகள் 10 Under Par எடுத்து மூன்றாம் இடத்தில் இருந்தனர்.
மூன்று நாள் ஆட்டம் முடிந்த பிறகே மக்களின் கவனம் அதிதி பக்கம் திரும்பியது. இந்திய வீராங்கனை ஒருவர் பதக்கம் வெல்லப்போகிறார் என்றவுடன் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தவர்கள், கூகுளில் கோல்ஃப் பற்றி தேடி படையெடுத்தனர். அதிதி அசோக் செய்திருக்கும் சம்பவத்தை அறிந்து புல்லரித்து போனவர்கள் அதிகாலை அலாரம் வைத்து நான்காம் நாள் ஆட்டத்தை காண தயாராகினர்.
இத்தனை நாளும் அதிதிக்கு உறுதுணையாக அவருடைய அம்மா மட்டுமே Caddie ஆக அவருக்கு பின்னால் நின்றார். இப்போது ஒட்டுமொத்த தேசமுமே அவருக்கு பின்னால் நின்றது. இதுவரை இல்லாத ஆதரவு, உத்வேகம், உச்சபட்ச எதிர்பார்ப்புடன் அதிதி கோல்ஃப் களத்தில் இறங்கினார்.
முதல் 4 குழிகளுக்கான வாய்ப்பிலும் பதற்றமில்லாமல் Par ஸ்கோர் அடித்தார். இதன்பிறகுதான், அதிதியின் ஆட்டமே சூடுபிடித்தது. தொடர்ந்து, இரண்டு குழிகளில் Birdie எடுத்து அசத்தினார். தன்னுடைய இரண்டாமிடத்தை யாருக்கும் கொடுக்காமல் கெட்டியாக பிடித்திருந்தார்.
இதே டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இத்தாலியின் லேமன்ட் மார்ஷல் ஜேக்கப் தங்கம் அடித்த போது, சக போட்டியாளர்கள் அரண்டு போயிருந்தனர். ”இவர் யார் என்றே எங்களுக்கு தெரியாது, இத்தாலியர் ஒருவர் எப்படி ஓட்டப்பந்தயத்தில் வெல்ல முடியும்?” என அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதேமாதிரியான ஒரு நிலைதான் இன்றும் இருந்தது. இந்தியர் ஒருவர் கோல்ஃபில் இவ்வளவு சிறப்பாக எப்படி ஆட முடியும் என அத்தனை பேரும் அசந்துவிட்டனர்.

அதிதியும் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். இடையில் சின்ன சறுக்கல் உண்டானது.
9 மற்றும் 11-வது குழியில் பந்தை சேர்க்க Bogey எடுக்க வேண்டிய சூழலுக்கு போனார் அதிதி. இதுதான் அவருக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இதன்பிறகுதான் 3, 4, 2 என ஏறி ஏறி இறங்க ஆரம்பித்தார்.
கடைசி சில நிமிடங்கள் எல்லாம் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. கடைசி ஒரே ஒரு குழி மட்டும் இருக்கிறது. ஒரு Birdie போட்டால் அதிதி மூன்றாம் இடம் பிடிக்கலாம். இரண்டே ஸ்ட்ரோக்கில் குழிக்கு கொஞ்சம் அருகே பந்தை கொண்டு வந்துவிட்டார். இன்னும் இரண்டு ஸ்ட்ரோக் மிச்சமிருக்கிறது. ஒரே ஸ்ட்ரோக்கில் முடித்தால்தான் Birdie. சீட் எட்ஜ் திரில்லர் போல சூழல் இருந்தது. பதற்றமடையாத அதிதி மெதுவாக பந்தை தட்டுகிறார். குழியை நோக்கி சலனமின்றி உருண்டு சென்ற பந்து கொஞ்சம் விலகி நூலிழையில் குழிக்கு பக்கவாட்டில் சென்றது. அடுத்த வாய்ப்பில் பந்தை குழிக்குள் போட்டு Par வாங்கினார் அதிதி. ஆனால், அதில் பிரயோஜனமில்லை. அதிதி 15 Under Par. அவருக்கு முன்பிருந்த இரண்டு வீராங்கனைகள் 16 Under Par. ஒரே ஒரு ஸ்ட்ரோக்கில் ஒரே ஒரு புள்ளியில் பதக்கம் பறிபோனது. அதிதி அசோக் பதக்கம் வெல்லவில்லைதான். ஆனால், இதுவரை மேல்தட்டு மக்களுக்கான விளையாட்டாக மட்டுமே அறியப்பட்டிருந்த கோல்ஃபை நான்கே மணி நேரத்தில் அனைத்து மக்களுக்குமானதாக ஜனநாயகப்படுத்தியிருக்கிறார். கிரிக்கெட் மட்டையை மட்டுமே பிடித்த இந்திய கைகள் இனி கோல்ஃப் க்ளப்களை பிடிக்க பிரயத்தனப்படும். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்?