நெய்வேலி என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கொண்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. அந்த வகையில் சுரங்கம் 1 ஏவில் இருந்து வெளியேற்றப்படும் நீரை வடலூர் அருகே உள்ள பார்வதிபுரம், கருங்குழி வடக்குப்பகுதி மற்றும் நயினார்குப்பம், மருவாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் தற்போது சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் குறுவை நெல் சாகுபடி செய்து இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், பயிர்கள் கருக தொடங்கி விட்டது. இதையடுத்து விவசாயிகள், என்.எல்.சி. நிறுவனத்திடம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை வழக்கம் போல் வழங்கிட கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரையில் வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பார்வதிபுரம் பகுதி விவசாயிகள், என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை சுரங்கப்பகுதியில் தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார், என்.எல்.சி. அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அதிகாரிகள் தரப்பில் 3 நாட்களில் சுரங்கத்தில் இருந்து செங்கால் ஓடை வழியாக மீண்டும் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Read Time:2 Minute, 32 Second