தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,600 கோவில்களிலும் 1, 2, 3-ந் தேதிகள் மற்றும் ஆடி அமாவாசையையொட்டி 8-ந் தேதியும் (அதாவது இன்று) பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மாறாக பக்தர்கள் இன்றி கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடந்தது.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் இன்றும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
மேலும் ஆறுகள் மற்றும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி அமாவாசையையொட்டி அதிகளவில் பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால், நேற்று முன்தினம் இரவே கோவில் மூடப்பட்டது. இதுபற்றி அறியாத பக்தர்கள் நேற்று காலை கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கோவில் மூடப்பட்டிருந்ததை கண்டு தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் நாளை (திங்கட்கிழமை) முதல் 23-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள அரசு, மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது 23-ந் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதேபோல் கடலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் நேற்று காலை முதல் நடைசாத்தப்பட்டது. பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள், வெளியே நின்று தரிசனம் செய்து சென்றனர்.