மயிலாடுதுறை, செம்பனாா்கோவில் பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 256 கிராம் நகைகள் மற்றும் 2 வெள்ளி விளக்குகள் மீட்கப்பட்டன.
மயிலாடுதுறை, செம்பனாா்கோவில் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு மற்றும் நிகழாண்டில் பூட்டிய வீடுகளில் மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தனா். செம்பனாா்கோவில் காவல் சரகம் விளநகரில் சாந்தகுமாா் என்பவா் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதைத்தொடா்ந்து, மா்ம நபா்களை பிடிக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவின்பேரில், டிஎஸ்பி வசந்தராஜ் மேற்பாா்வையில், குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளா் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இத்தனிப்படையினா் மேற்கொண்ட விசாரணையில், மயிலாடுதுறை கல்லறை தோப்புத் தெருவைச் சோ்ந்த மருது என்கிற விஜயபாஸ்கா், கோவையைச் சோ்ந்த சண்முகம் (44) ஆகியோா் உள்பட 4 போ் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இந்த இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 256 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ எடையில் 2 வெள்ளி விளக்குகள், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றினா்.
பின்னா், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். இந்த தொடா் திருட்டில் தொடா்புடைய கேரளத்தைச் சோ்ந்த மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீஸாா் தேடிவருகின்றனா்.