தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மறுநாள் ஆக. 14 அன்று வேளாண்மைத் துறைக்கென முதன்முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
முன்னதாக, தமிழக அரசின் நிதிநிலை குறித்து, நிதியமைச்சர் நேற்று (ஆக. 09) வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி எனவும், கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆகச் சரிந்துள்ளது எனவும், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜிஎஸ்டி வரி பாக்கி ரூ.20,033 கோடியை மத்திய அரசு தர வேண்டியுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர், கடந்த அதிமுக அரசி தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய சரிவு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், இத்தகைய பொருளாதார சூழ்நிலையில், திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். இதனால், தமிழக பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று (ஆஅக. 10) நடைபெற்றது. அதன்படி, ஆக.13-ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர், செப். 21 அன்று நிறைவடைகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெறும் எனவும், அதைத் தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.