மயிலாடுதுறை டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுவதை தடுக்கக் கோரி ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதை தடுக்க கோரி ஏராளமான பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை நகர காவல்நிலையம் பின்புறம் தங்கபிரகாசம் என்பவர் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதேபோன்று நகர காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் பலர் போட்டி போட்டுக்கொண்டு சாராய விற்பனை செய்து வருவதாகவும், இது குறித்து மயிலாடுதுறை நகர காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் கள்ளச்சாராய வியாபாரிகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் கள்ளச்சாராயத்தை குடித்து விட்டு பலர் அப்பகுதியில் பிரசச்னையிலும் ஈடுபடுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருகிறது என்றும் உடனடியாக சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறையில் காவலர்கள் மீது பெண்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மாவட்ட முழுவதும் பல்வேறு கள்ளச்சாராய ஒழிப்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருந்தபோதிலும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உயிரிழப்பு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.