கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.
குழந்தைகளுக்கு
கொய்யாப் பழத்தைச் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு, பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதையை எடுத்து அரைத்து, அதனுடன் தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, தோசையாக வார்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. சிறிய பழங்களாக இருந்தால், மூன்று சாப்பிட முடியும் எனில் நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம்.
கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.
சருமத்துக்கு மிகவும் நல்லது கொய்யா. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக் குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள், ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51., கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.
கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் என்பதால் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது, ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும், தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கும் ஏற்ற பழமாக திகழ்கிறது.
மேலும், இது ஆப்பிளைப் போல் காஷ்மீரிலிருந்தோ, இமாச்சல பிரதேஷத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூரிலேயே கிடைக்கிறது. கொய்யா பழத்திற்கு சீசன் என்று எதுவும் கிடையாது, ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. கொய்யாப் பழம் மற்றும் அதன் கொட்டையில் புரோட்டீன், கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே கிடைக்கிறது என்பது மட்டுமே குறை. இருந்தாலும் நார்ச்சத்து, கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைவான அளவிற்கு தன்னுள் அடக்கியுள்ளது.