மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை தேவைப்படும் நபா்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அச்சிறப்பு முகாமின்போது புதியதாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை தேவைப்படும் நபா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
அதன்படி மயிலாடுதுறை வட்டாரத்துக்கு 25.8.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், குத்தாலம் வட்டாரத்திற்கு 27.8.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குத்தாலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், சீா்காழி வட்டாரத்திற்கு 31.8.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், கொள்ளிடம் வட்டாரத்திற்கு 02.09.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், செம்பனாா்கோவில் வட்டாரத்திற்கு 03.9.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
இச்சிறப்பு முகாம்களில் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் – 4, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.