கொரோனா நடவடிக்கை காரணமாக முன்பதிவில்லாத ரயில்களை ரயில்வே துறை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து வேலை நிமித்தமாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பயணிகளை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மண்டலத்தில் மயிலாடுதுறை நாகப்பட்டினம் காரைக்கால் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் 22 பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை மீண்டும் இயக்க உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பதிலளிக்குமாறு தெற்கு ரயில்வேக்கு மதுரை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் முன்பு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து முன்பதிவு இல்லாத தொடர் வண்டிகளை இயக்க வலியுறுத்தி ரயில்வே தொடர் வண்டி பயணிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பயணிகள் சங்க தலைவர் மெயில் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
முதலில் செயலாளர் தமிழன் கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் முரளிதரன், ரிட்டயர்டு துணை கலெக்டர் மகாலிங்கம், வழக்கறிஞர் சிவச்சந்திரன் மற்றும் வர்த்தக சங்கத்தினர், ஜெயின் சங்கத்தினர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஏராளமான பொதுமக்களுடன் கலந்து கொண்டு தொடர்வண்டியை இயக்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்ட முடிவில் பயணிகள் சங்க கௌரவத் தலைவர் சின்ன கலைஞர் நன்றியுரையாற்றினார்.