சிதம்பரத்தில் புவனகிரி புறவழிச்சாலையில் பிரசித்தி பெற்ற பிரம்மராயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சீதா என்பவர் கோவில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சீதா, கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பதறியடித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு சிதறி கிடந்தது. இதுகுறித்து அவர் கோவில் செயல் அலுவலர் மஞ்சுவுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர் விரைந்து வந்து உண்டியலை பார்வையிட்டார். அதில் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் அப்படியே இருந்தது.
அப்போது தான் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் உண்டியல் பூட்டை உடைத்ததும், நீண்ட நேரம் போராடியும் உண்டியலை திறக்க முடியாததால் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனால் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த ஆயிரக்கணக்கான ரூபாய் தப்பியது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் மஞ்சு, சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.