நாகையில் கடந்த சில தினங்களாக காடம்பாடி, நம்பியார் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி நகர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மின்வாரிய அலுவலர்கள் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் (டிஸ்க்) பழுது கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நேரம் போராடி சரி செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை நம்பியார் நகர், மறைமலைநகர், இளைசேரன் நகர், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்தடை ஏற்பட காரணம் குறித்து ஆய்வு செய்தனர். ஆனால் மின்தடை எதற்கான ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு பிறகு அந்த பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் ஒரு ஓணான் தொங்கி கொண்டிருந்தது தெரிய வந்தது. இது மின்கம்பியில் ஏறிய சிக்கி கொண்டதால் தான் மின்தடை ஏற்பட்டது தெரிய வந்தது.
பின்னர் வெளிப்பாளையம் உதவி செயற்பொறியாளர் அருண் தலைமையிலான மின் ஊழியர்கள் மின்மாற்றியில் ஏறி மின்கம்பியில் சிக்கியிருந்த ஓணானை அகற்றி சீரமைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்கம்பிகளில் அணில் அடிபட்டு மின்சாரம் அவ்வப்போது தடைப்பட்டது.அதுபோல தற்போது மின்கம்பியில் ஓணான் சிக்கி 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.