நாட்டின் சுதந்திர தின விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸ் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்பேரில், கடலூர் முதுநகர் ரெயில் நிலைய பகுதியில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில், காவலர்கள் பாரதி, ஜெகதீசன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாளங்களையும் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
இதேபோல் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட் தலைமையில், தனிப்பிரிவு ஏட்டு பாஸ்கர் மற்றும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தண்டவாள பகுதியில் நடந்து சென்று மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். மேலும் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளையும் போலீசார் சோதனை நடத்தினர்.
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே இருப்புப்பாதை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித், தனிப்பிரிவு ராம்குமார், கணேசன் மற்றும் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம், ரெயில் தண்டவாளம், நடைமேடை, ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.