0 0
Read Time:8 Minute, 11 Second

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பைபர் படகு மீது விசைப்படகால் மீனவர்கள் மோதினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 படகுகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். 500 பைபர் படகுகளும், 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் உள்ளன. இந்த கிராமத்தினர் சுருக்குமடி வலைகள் கொண்டு மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சுருக்குமடி வலைகளை கொண்டு மீன் பிடிக்க பூம்புகார் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனால் பல்வேறு மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் நேற்று காலை வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருடைய பைபர் படகில் அதே ஊரைச்சேர்ந்த சிலம்பரசன்(வயது 35), ராமச்சந்திரன் மகன் ராம்குமார்(28) ஆகிய 3 பேரும் வானகிரிக்கு அப்பால் உள்ள கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென வேகமாக வந்த ஒரு விசைப்படகு, இவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகு மீது மோதியது. இதன் காரணமாக பைபர் படகு இரண்டாக பிளந்தது. இதனைத்தொடர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்த 3 மீனவர்களும் கடலில் இருந்து தப்பி கரைக்கு திரும்பினர். இதில் சிலம்பரசன், ராம்குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் மற்ற மீனவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை அறிந்த சக மீனவர்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த உடைந்த பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.  

துகுறித்து பூம்புகார் போலீசார் மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுருக்கு மடி வலைகளை கொண்டு மீன்பிடிக்க வானகிரி மீனவர் கிராமத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முன்விரோதம் காரணமாக விசைப்படகு மூலம் பைபர் படகை மோதி சேதப்படுத்தி இருக்கலாம் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வானகிரி செல்லும் தர்மகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வானகிரி மீனவர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று மதியம் பூம்புகார் காவிரி கடலோடு சங்கமிக்கும் சங்கமத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு பைபர் படகு  திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள மளவென பரவி அருகில் இருந்த 3 பைபா் படகுகளுக்கும் பரவியது. இதனால் இந்த தீ விபத்தில் 4 பைபர் படகுகளும் எரிந்து சாம்பலாகின.இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பூம்புகார் மீனவர் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயில் எரிந்த பைபர் படகுகள், பூம்புகாரை சேர்ந்த ஆரிய செட்டி, ராஜாக்கண்ணு, கந்தவடிவேலு, மதிசந்திரன் ஆகியோருக்கு சொந்தமானது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

பூம்புகார் போலீஸ் நிலையத்தில் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் மதுமிதாரவி ஆகியோரிடம் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தடை செய்யப்பட்ட வலைகள் கொண்டு மீன்பிடிக்கும் மீனவர் கிராமங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம பொறுப்பாளர்கள் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினர்.

இந்நிலையில் நேற்று பூம்புகார் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 36 விசைப்படகுகளில் தரங்கம்பாடி எல்லை பகுதிக்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்றதாக தகவல் பரவியது. இதனை தடுக்கும் விதமாக தரங்கம்பாடி, சின்னங்குடி, குட்டியாண்டியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்கு சென்று பூம்புகார் மீனவர்களின் விசை படகுகளை சந்திரபாடி பகுதியில் சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தவிர தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி ஆகிய பகுதிகளில் கரையிலும் ஏராளமான மீனவர்கள் திரண்டனர். இதனால் கடலில் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

இதனைத்தொடர்ந்து அங்கு மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் தலைமையில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் முன்னிலையில் ஏராளமான போலீசார் கடலோர பகுதிகளில் குவிக்கப்பட்டனர். வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீனவ கிராம பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு, படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதை  தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பூம்புகாருக்கு நேற்று மாலை வருகை தந்தார். பூம்புகார் காவல் நிலையத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மீனவ கிராம பொறுப்பாளர்களிடம் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %