நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 13-ந்தேதி இரவு இந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் அரிவாள் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துலிப் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றதாக புஷ்பவனம் அருகே உள்ள பெரியகுத்தகை கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் (வயது49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்தனர்.