கடலூரை சேர்ந்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் கூறுகையில், தமிழக அரசு முதல் முதலாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதை தமிழ்நாடு விவசாய சங்கம் வரவேற்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 192.50 ரூபாய் அறிவிக்கப்பட்டு, கரும்புக்கான விலை ரூ.2,900 கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.நெல்லுக்கான ஆதார விலை ரூ.30 உயர்த்தி, குவிண்டாலுக்கு ரூ.2,060 நிர்ணயித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பண்ருட்டியில் ரூ.10 கோடியில் நவீன குளிர்பதன கிடங்கு பலா சிறப்பு மையமும், வடலூரில் தோட்டக்கலை பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் விலை கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என்றார்.
சிதம்பரத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், இயற்கை விவசாயத்திற்கென்று தனியாக ஒரு துறை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. இது இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு இலவச மின்சார திட்டத்திற்காக ரூ.4,508 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் அதே நேரத்தில் 7 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்பு கேட்டு 10 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம், ஆழ்துளை கிணறு மூலமாக விவசாயம் செய்து வருவதால் உடனே இலவச மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறுகையில், புவிசார் குறியீட்டுக்காக பண்ருட்டி பலா, முந்திரி, பொன்னி அரிசி ஆகியவற்றை தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குறியது. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பண்ருட்டியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டம், வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்கும் அறிவிப்பும், வட்டார அளவில் விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, விவசாய பொறியியல் துறை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கும் அறிவிப்பு சிறப்பானது. ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.1500 கோடிக்கு மேல் உள்ளது பற்றி ஏதும் கூறாதது கவலை அளிப்பதாக உள்ளது என்றார்.
விருத்தாசலத்தை சேர்ந்த விவசாயி தங்க.தனவேல் கூறுகையில், குறைந்தபட்ச நெல்லுக்கான ஆதார விலையை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் உயர்த்தியது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் கிலோவிற்கு 5 ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்த்திருந்தோம். விவசாயிகள், விவசாய பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டிருந்தோம். அதுவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு இலவசமாக இடுபொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். அதுவும் வழங்கப்படவில்லை. அதனால் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்றார்.