நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருடைய மனைவி மாலதி (வயது 42). இவர்களுடைய மகள் சீத்தளாதேவி(22). அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி வசந்தா(44). நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு மாலதி, சீத்தளாதேவி, வசந்தா ஆகிய 3 பேரும் நேற்று வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் ஓடிச்சென்று அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மாலதி கூறியதாவது:-எனது மகன் சிவசாந்தன்(22), வசந்தா மகன் ராஜ்குமார்(23) ஆகிய இருலரும் கடந்த 14-ந்தேதி ேமாட்டார் சைக்கிளில் நாகையில் உள்ள இறால் வளர்ப்பு பண்ணைக்கு வேலைக்கு சென்றனர். அதன்பின்னர் அவர்களை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களது மகன்கள் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டி விட்டு சென்றனர். இதையடுத்துதான் எங்களது மகன்களை காணவில்லை. எங்களது மகன்கள் மீது போலீசார் பொய் வழக்குப்போட்டு வேறு எந்த இடத்திற்காவது அழைத்து சென்று இருக்கலாம். எனவே அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து நாகூர் போலீசார் நடத்திய விசாரணையில் சிவசாந்தன், ராஜ்குமார் ஆகிய இருவரும் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. இதனால் நாகூர் போலீசார், வேட்டைக்காரனிருப்பு போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.