இரு கிராம மீனவர்களுக்கு இடைேய மோதல் ஏற்படாமல் இருக்க பூம்புகார் சங்கமத்துறையில் கண்காணி்ப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் வானகிரி மீனவ கிராமத்தினர் இடையே சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதில் பிரச்சினைகள் இருந்து வருகிறது. பூம்புகார் மீனவ கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முற்றிலும் சுருக்கு மடி வலை கொண்டு மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவர்கள் சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க அனுமதி கேட்டு பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் வானகிரி மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் சிறு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே வானகிரி கிராமத்தினர் சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பூம்புகார், வானகிரி இரு கிராமத்தினர் இடையே முன்விரோதம் நிலவி வருகிறது. இதன் உச்ச கட்டமாக கடந்த 14-ந் தேதி காவிரி சங்கமத்துறையில் நிறுத்தப்பட்டிருந்த பூம்புகார் மீனவர்களின் 4 பைபர் படகுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அதே நாளில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவரின் பைபர் படகு சேதப்படுத்தப்பட்டது. இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பூம்புகார் மற்றும் வானகிரி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இரு கிராமத்தின் நடுவில் உள்ள காவிரி சங்கமத்துறையில் சீர்காழி உதவி போலீஸ் சூப்பிரண்டு லாமேக் அறிவுரையின் பேரில் பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மேற்பார்வையில் நேற்று போலீசார் கொட்டகை அமைத்து இரவு பகலாக இரு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்படாத வண்ணம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், இரு கிராமத்திற்கும் இடையே மையமாக உள்ள காவிரி சங்கமத்துறையில் இருந்து கண்காணிக்கும் பொருட்டு ெகாட்டகை அமைத்து உள்ளோம். தற்போது மழை அடிக்கடி பெய்து வருவதால் போலீசார் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.