நாகூர் அருகே குடும்ப தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள பெரிய கண்ணமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் நீலமேகம்(வயது 55). விவசாயி. இவருடைய மகள் நளினி(30). நாகையை அடுத்த வலிவலம் இறையான்குடி படுகைத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(33).
இவருக்கும், நளினிக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நளினி கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் பெரிய கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனது தந்தை நீலமேகம் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடராஜன் தனது மனைவி நளினி மற்றும் குழந்தைகளை சமாதானம் பேசி வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கும், நளினிக்கும் இடையே மீண்டும் தகராறு நடந்தது. இதை சமாதானம் செய்து வைக்க நீலமேகம் முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜன் தனது மாமனார் நீலமேகத்தை அங்கிருந்த கட்டையால் தாக்கியதுடன், அரிவாளால் தலையில் வெட்டினார். இதில் நீலமேகம் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீலமேகத்தை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நீலமேகம் இறந்து விட்டதாக கூறினர்.இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். குடும்ப தகராறில் மாமனாரை, மருமகன் வெட்டிக்கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.