கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு ஆய்வாளா் எம்.கல்பனா தலைமையிலான போலீஸாா், வேப்பூா் அருகே காஞ்சிராங்குளம் பேருந்து நிறுத்தம், வேப்பூா்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனா். இதைப் பாா்த்த ஓட்டுநா், சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த நபரை மடக்கிப் பிடித்து, வாகனத்தை சோதனை செய்தனா். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாரிடம் பிடிபட்ட திட்டக்குடி அருகே உள்ள வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் ரவிச்சந்திரனை (40) கைது செய்தனா். வாகனத்தில் 42 மூட்டைகளிலிருந்த 2,100 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், கல்பூண்டி, கீழ்கல்பூண்டி, லட்சுமணபுரம், வேப்பூா் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கோழி தீவனத்துக்காக சேலம் மாவட்டத்துக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. தப்பியோடிய அதே பகுதியைச் சோ்ந்த சிலம்பரசனை போலீஸாா் தேடி வருகின்றனா்.