மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி ேபசினார். அப்போது அவா் கூறியதாவது:-
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி செய்திட வேண்டும். அந்தவகையில் காவல், தீயணைப்பு, கடலோர காவல்படை, பேரிடர் மீட்புப்படை, ஊர் காவல் படை, தேசிய மாணவர் படை ஆகிய பிரிவினரை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்ட அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை தொடங்கி 24 மணி நேரம் சுழற்சி பணியில் அலுவலர்களை நியமனம் செய்திட வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் தேவையான மணல் மூட்டைகள், மணல் ஆகியவற்றை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளை முன்கூட்டியே கண்காணித்து அவற்றை வலுப்படுத்திட சவுக்கு கம்புகள், மணல் மூட்டைகளை அந்த பகுதிகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் மரம் அறுக்கும் கருவிகளை தேவையான அளவு கையிருப்பு வைத்திட வேண்டும். மின்சாரத்துறையினர் தாழ்வாக தொங்கும் மின்சார கம்பிகளை சரிசெய்திட வேண்டும். தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். வேளாண் பொறியியல்துறையினர் டிராக்டர்கள், பொக்லின் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சுகாதாரத்துறையினர் தொற்றுநோய் மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். அவசர ஊர்திகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டுறவுத்துறையினர் ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான குடிமை பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை தினசரி சுத்தம் செய்து, தேவையான அளவு குளோரின் கலந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்திட வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அலுவலர்கள் முன்கூட்டியே செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், உதவி கலெக்டர்கள் பாலாஜி, நாராயணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.