கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 44 பணிகள் முடிவடைந்து உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் தொடர்பாக மாவட்ட ஊரக சாலைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில் ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் என்னும் விழா அடுத்த ஆண்டு சுதந்திர தின விழா வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்ட ஊரக சாலைகள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் கிராம சாலைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை இணைப்பதற்கான ஊரக இணைப்பு சாலைகள் தேர்வு செய்யப்படுகின்றன. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் நோக்கம் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு இணைப்பு சாலை வசதி அமைத்தல் மற்றும் சாலைகளை மேம்படுத்துதல் ஆகும்.
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 2015-16 -ம் ஆண்டு முதல் ஒட்டு மொத்த தொகையில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்கு தொகை மற்றும் 40 சதவீதம் மாநில அரசின் பங்குத் தொகையில் சாலைகள் போடப் படுகின்றன.
சாலை பாதுகாப்பு மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகள் 5 ஆண்டுகள் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது இத்திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் சாலைகள் அனைத்து பருவ காலங்களில் பயன்படுத்தும் வகையிலும் குக்கிராமத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் 73 சாலைகள் 232 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேர்வு செய்து இது வரை 44 சாலைகள் 116 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கிராம சாலைகள் மூலம் அந்த கிராமம், விவசாயம், தொழில் வளர்ச்சி போன்றவை வளர்ச்சி அடையும்.
இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
தொடர்ந்து நடந்த கருந்தரங்கில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தை செயல்படுத்துல், ஊரக சாலை அமைப்பில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
முன்னதாக நல்லிணக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன் குமார் ஜி.கிரியப்பனவர், செயற்பொறியாளர் பிரபாகரன், புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் விஜயகுமார், செயற்பொறியாளர் ரேவதி, இந்துஸ்தான் நிலக்கரி நிறுவன வணிக மேலாளர் சுபின் பன்னோஸ், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், புதுச்சேரி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.