ஆடி மாதம் நிறைவு பெற்ற நிலையில், அனைவரும் கூடி சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழல் காரணமாக கோயில் வாசல்களில் இன்று பல திருமணங்கள் நடந்தன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி உடனாகிய தையல்நாயகி அம்பாள் ஆலயத்தில் திருமணம் நடத்தினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் அங்கு அதிகளவு ஆவணி மாதங்களில் திருமணம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று இங்கு திருமணம் நடத்த முடிவு செய்தவர்கள் கோயில் மூடப்பட்டு அனுமதி மறுத்ததை அடுத்து கோபுர வாசலில் நின்று புதுமண தம்பதியினர் உறவினர்கள் சூழ, வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க மங்கல வாத்தியங்கள் முழங்க மாலை மாற்றி தாலி கட்டிக் கொண்டனர். பின்பு திருமண மண்டபங்களுக்கு சென்று தங்களது சம்பிர்தாய நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையானது அதிகரிக்க தொடங்கி மாவட்டத்தில் கொரனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிகிச்சை பலனின்றி 274 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்றாம் அலை பரவாத வண்ணம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
இதுபோன்ற வேலையில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி மக்கள் கூடி வருவதை காண முடிவதாகவும் இதனால் வைரஸ் தொற்று மீண்டும் மாவட்டத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற சுபநிகழ்ச்சிகளை கண்காணிக்க தனி அதிகாரிகளை நியமித்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.