நெய்வேலி 21-வது வட்டம் அண்ணாசாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால் (வயது 25). முன்விரோத தகராறில் இவர் வீட்டுக்கு கடந்த 7.7.2021 அன்று 21-வது வட்டம் நாவலர் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் வீரமணி (40), புதுத்தெரு சக்கரவர்த்தி மகன் சுதாகர் (23), சத்தியமூர்த்தி, கார்த்தி, பிளேடு என்கிற ரமேஷ், தமிழரசன், எழிலரசன், பிரசாந்த், யோகேஸ்வரன் ஆகிய 9 பேர் சென்றனர்.
பின்னர் அவர்கள் 9 பேரும் ஜெயபாலை ஆபாசமாக பேசி தாக்கினர். தொடர்ந்து அவர்கள் கையில் கொண்டு வந்த நாட்டு வெடி குண்டுகளை அவரது வீட்டு மீது வீசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது பற்றி ஜெயபால் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி வீரமணி மீது நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் கொலை, வழிப்பறி உள்பட 25 வழக்குகள் உள்ளன. சுதாகர் மீது கொலை உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளன. ரவுடிகளான இவர்கள் 2 பேர் மீதான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் நெய்வேலி தெர்மல் போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் வழங்கினர்.