ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் எனவும், கடற்கரைகளில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அளிக்கும் தளர்வுகளை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.