கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு வாகனம் சென்னையில் உள்ள மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் 75- ஆவது இந்திய சுதந்திர பெருவிழா மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு வாகனம் (22.08.2021) இன்று மற்றும் 23.08.2021 நாளை கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், பெண்ணடம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோயில், குமராட்சி, சிதம்பரம் மற்றும் புவனகிரி ஆகிய பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் குறும்படங்கள் திரையிட உள்ளது.
முன்னதாக, கடலூர் டவுன்ஹாலில் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து இந்திய சுதந்திர தின 75-ஆவது ஆண்டு ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டம் 2.0 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டம் 2.0 மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் அனைவராலும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டம் 2.0 ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தானும் பங்கு பெற்றார்.
இவ்விழிப்புணர்வு ஓட்டம் கடலூர் டவுன்ஹாலில் இருந்து வெள்ளி கடற்கரை சாலையில் உள்ள இந்திய மருத்துவ கழகம் வரை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், எஸ்.பி. சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் ஜி.கிரியபப்னவர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமேஷ் பாபு, துணை இயக்குனர் (சுகாதரம்) மீரா, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சிவா, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ரிஜேஷ் குமார், மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், மக்கள் தொடர்பு அலுவலக துணை இயக்குனர் முனைவர் சிவகுமார், தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.