தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கன மற்றும் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூரில் நேற்று காலை 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு மதியம் 12.30 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
காலை 6 மணி முதல் மதியம் வரை இடைவிடாது பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகளும் நேற்று வியாபாரம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் மழையில் நனைந்தபடி வேலைக்கு சென்றதை காணமுடிந்தது. மேலும் பகலிலே கார் உள்ளிட்ட வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகன ஓட்டிகள் சென்றனர். பின்னர் மதியம் 2 மணிக்கு பிறகே மழை முற்றிலும் ஓய்ந்து, இயல்பு நிலை திரும்பியது.
மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் உள்ள ஒரு புங்கமரம் நேற்று காலை திடீரென வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் மரத்தின் கிளைகள் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததால், அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் மின்தடையால் பெரிதும் அவதியடைந்தனர்.இதுபற்றி அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் மின்வாரிய அதிகாரிகள் மாலையில் வந்து, அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரிசெய்தனர். அதன் பிறகே மின்வினியோகம் செய்யப்பட்டது. இதே போல் விருத்தாசலம், பண்ருட்டியில் சாரல் மழை பெய்தது.